ஒரு இணைய அடிமையின் கதை.!
Monday, February 8, 2010
ஞாயிறுகள் வருவதுண்டு. இன்னும் பல நாட்களும் வந்து போவதுண்டு. ஒவ்வொரு காலையும் விடியும் போது இன்று இதை சாதித்திட வேண்டுமெனத் தொடங்கி , சிலசமயம் தாளில் எழுதி , சில சமயம் கைபேசியில் குறித்துக்கொள்வதுமுண்டு.
அன்றைய நாளின் அந்த சுறுசுறுப்பு , அதிகபட்சம் 10 மணி வரை காண்பதில்லை. வந்து அமர்ந்து தினமலர் , தினமணி, தட்ஸ்தமிழ் , தமிழ்வின் மற்றும் தமிழ்மணம் இப்படியாக ஒரே செய்தியை பல்வேறு கோணங்களில் படித்து வாசித்து காப்பியை அருந்தும் போது கைபேசியில் குறித்து வைத்துக்கொண்டிருக்கும் குறிப்புகள் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரித்துக்கொள்ளூம்.
வாசிப்பின் அனுபவத்தில் அக்குறிப்புகளின் சிரிப்புகள் கூட நம்மை எட்டுவதில்லை. குரங்கினை முன்னோரெனக் கொண்ட நமக்கும் குரங்கு போலவே குணம் வாய்த்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அங்கொன்றும் , இங்கொன்றுமாகத் தாவித் திரிந்து தனது பலகீன ஓட்டைகளின் உள்ளே சவுகரியமாகத் தங்கிக்கொள்கிறது.
இலக்கு , செய்ய வேண்டிய வேலைகளின் அளவு , பேச வேண்டிய தொலைபேசிகளின் எண்ணிக்கை , அனுப்பவேண்டிய தபால்கள் இவையனைத்தும் மறந்து தனது விருப்ப நிலையில் மனசு ஆழ்த்திக்கொள்கிறது. அஃதன்றி வேறொன்றை தேட விரும்பாத நிலையிலேயே மதிய உணவிற்கான வேளையும் வந்து விடுகிறது.
எல்லோருமுணவருந்த செல்கையில் கூட எங்கேயும் ஒரு மூலையில் ஏதோவொன்றை கூகிளாரிடமோ , விக்கியாரிடமோ கேட்டுக்கொண்டிருப்பதினை வழக்கமாக்கிக் கொண்டபடியால் தொன்னூற்றுச் சொச்சம் சதவீதம் மதிய உணவு நேரந்தாண்டி உணவருந்துவதுவும் வழக்கமாகிப் போனது.
கணினியில் மூழ்கி முத்தெடுக்க முயற்சித்த போதில் இணைப்பில் வந்த தொலைபேசி இணைப்பு சொன்ன சேதியை தொலைபேசி இணைப்பை துண்டித்ததும் மறந்து போய்விடுகிறது. தொலைபேசியவர் இன்னுஞ் சற்று நேரங்கழித்து அழைத்துச் “செய்தாயா…?” என்று கேட்கையில் செய்து கொண்டிருக்கிறேன் என்று பொய்யுரைக்க வேண்டியதிருக்கிறது. பொய்யுரைத்த பின் , மூளையைக் கசக்கி அவர் என்ன செய்யச் சொன்னார் என்று யோசித்து அதை குறிப்பாக எழுதிக்கொள்ளவேண்டியிருக்கிறது.
எத்துணை முறை ரிப்பெரஷ் அழுத்தினாலும் அதே செய்திகளே வந்து தொலைப்பதால் கூட கணினிக் கவனம் சிதறுவதே இல்லை. உலக நடப்பியலை , ஊர் நடப்பியலை , தமிழக நடப்பியலை , ஈழ நடப்பியலை , நாட்டு நடப்பியலை அறிந்து கொள்ள கணநேரமும் சிந்திக்கும் மனதானது தம்மைச் சுற்றி நடக்கும் , பேசும் , சிரிக்கும் , கத்தும் , எழுதும் , வேண்டும் எதுவுமே சலனப்படுத்துவதில்லை.
அறிந்த நடப்பியலை யாருடனாவது கதைக்கத் துடிக்கும் மனம்…ஆயினும் நம்மைச் சலனப்படுத்தாத எதுவும் நம்மால் சலனப்படுவதில்லை. நாம் புறக்கணிக்கும் எதுவும் நம்மைப் புறக்கணிக்காமல் இருப்பதில்லை. இரத்த உறவுகளையும் , உற்ற நண்பர்களையும் தவிர.
ஒரே பார்வையால் கணினியின் எழுத்துக்களைத் துரத்தித் துரத்தி தூங்கும் போது கூட கணினி எழுத்துக்களும் , கலவையான எண்ணங்களுமாய் வந்து போகின்றன. எழுந்தவுடன் காலைக்கடன் அழைத்தாற் கூட கணினிப் பெட்டியை திறக்காமல் கண நேரம் காத்திருக்க இயலுவதில்லை இப்போதெல்லாம். !
கணினியில் நாம் கலந்த நேரம் - உயிராய் , சதையாய் , உற்ற நட்பாய் , கலந்த நண்பர்களும் , உறவினர்களும் எதேச்சையாய்ச் சொல்லாமல் வீட்டிற்கு வரும் நிமிடம் , வெறுப்புடன் கலந்த வெற்றுப்புன்னகையால் வரவேற்று , அமரச்செய்து அடுத்தெப்போது இவர்கள் கிளம்புவார்கள்? என்று எண்ணிய பொழுதுகளின் இரவில் யாருமற்ற ஹோட்டலின் அறையில் ,மாதக்கணக்காக தங்கியிருந்த போது தமிழ்பேச யாரும் கிடைபார்களா” என்று அலைந்த மத்தியப்பிரதேச நினைவுகள் வந்து வந்து போவதுண்டு.!!!!
சமூகக் கோபம் , உலகத்தின் சரியில்லாத பகுதிகளைச் சரி செய்யத்துடித்திடும் எண்ணம் , யாருமற்ற அனாதைகளைப் போல நாம் ஆகிவிட்டோமே என்ற ஈழக்கோபம் என்று கொப்பளிக்கும் எண்ணங்களின் வடிகாலுக்காய் ஆரம்பித்து இப்படி எதையுஞ் செய்யவியலாமல் , செய்யப்பிடிக்காமல் ஒரு இணைய அடிமையாய் மாறி விட்டதன் வருத்தமுண்டு உள்ளுக்குள்….!
தேவதைகளின் பூமி , தெருவிளக்கின் வெளிச்சம் , கடந்து போகும் பெண்ணொருத்தி , தேடாத தனிமை , விடியாத இரவுகள் இப்படி படித்துப் படித்துத் தெளிந்த மனதுடன் அன்றைய அலுவலை முடித்து வீடு திரும்புகையில் எதுவுமற்ற வெறுமையுடன் , “இசையருவி”யில் நல்லதொரு பாடலைக் கூட ரிமோட்டில் “ம்யூட்” பட்டன் உதவியுடன் கேட்டு மகிழ்வதுண்டு.
பார்த்த களிப்பில் திறக்கும் கணினியை மேயத்தொடங்குவதில் அன்றைய இரவுணவுப்பொழுதும் கடந்த நாட்களை எண்ணினால் வருடக்கணக்கில் நீளும்….கடனுக்குச் சாப்பிட்டு கட்டிலில் படுக்கையில் சாய்கையில், அடுத்த நாளாவது இன்றைய வேலைகளைக் கட்டாயம் செய்தாக வேண்டும் என்று எண்ணம் எப்போதும் எழுவதுண்டு.!
இப்போதுங்கூட….
அனேகமாக இந்தப்பதிவு தான் இறுதிப்பதிவாக இருக்கவேண்டும் என்ற தணியாத ஆசையுடனும் , இன்றைய நாள் தான் இந்தக் கணினி அடிமை அவ்வடிமைத் தனத்திற்கு சாவுமணி கட்டும் கடைசி நாளாக இருக்க வேண்டும் என்ற நேர்மையான ஆசையுடனும் இருக்கிறான் அந்த இணைய அடிமை.!!!
இதுகாறும் ஏன் எழுதுவதில்லை , எதனால் வலைப்பூ பக்கம் வருவதில்லை என்று கேட்டுச் சலித்த பாசமிகு நண்பர்கள் , உறவுகள் கொண்ட அக்கறைக்கு நன்றி….!
நல்ல நோக்கத்திற்காக விடைபெறுவதும் நல்லதுதானே?
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.!

'‘.