செல்லரித்து மக்கப் போகும் ஈழத்துப் பிணங்கள்!
Saturday, July 11, 2009
பசிக்குமோ என்று தாய்ப்பால் வார்க்க தன் மார்பினில் புதைக்கிறாள் குழந்தையை அன்னை….!
பசியால் அழுகிறது குழந்தை….!
தூக்கம் வருகிறதோ என்று தொட்டிலில் போட்டு தாலாட்டுகிறாள் அன்னை….!
தூக்கம் தன்னைத் தழுவுகையில் அதுவென்னவென்று புரிந்து கொள்ளாமல் வேறெதையோ செய்கிறாள் அன்னை…
காரணம் குழந்தைக்கு என்னவேண்டும் என்று சுட்டத் தெரியாது….காலப் போக்கில் அவள் புரிந்து கொள்கிறாள் …தன் குழந்தைக்கு என்ன வேண்டுமென்று….!
ஆனால் , பேச , சுட்டத் தெரிந்த ஈழத்தமிழனத்தைக் கேட்காமாலேயே அவரவர் தத்தமது விருப்பு வெறுப்புக்களுக்கேற்ப அவர்கள் புண்ணைக் குத்திக் கிளறிக்கொண்டிருக்கிறார்கள்.
13 வது சட்டத்திருத்தமாம்…அதன் மூலம் அரசியல் உரிமையாம் …இந்தியா சொல்கிறது..அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம் என்று ராஜபக்சே சொல்லி நாள் பலவாயிற்று…எதிர்ப்புக்குரல் கூடக் காணோம்…!
தேர்தல்களை நடத்துவோம்..அதன் மூலம் வடக்கின் வசந்தம் என்று எழவு வீட்டில் பம்மாத்துக் காட்டுகிறார்கள்…நமது துரதிஷ்டம் அதற்குத் துணை போகுபவர்களும் கூட நம்மவர்கள்……..
மாடுகள் கன்றினை ஈன்ற பிறகு , ஒரு சில கன்றுகள் இறந்து விடுவதுண்டு. அதன் தோலை எடுத்துக்கொண்டு போய் வைக்கோலை நுழைத்து கன்றுதான் பால் கொடுப்பதாக பாவனை செய்வார்கள்…அதனை நம்பிக்கொண்ட மாடும் தன் கன்றே பால் குடிப்பதாக எண்ணிக்கொண்டு பால் கறக்க அனுமதிக்கும்….!
அப்படித்தான் பயங்கரவாதத்தை முறியடித்துவிட்டதாக பீற்றிக்கொண்டு வைக்கோல் துணித்த கன்றினை மாடுகளையொத்த சர்வதேசத்திடம் காட்டி நாடகம் செய்து கொண்டிருக்கிறது இலங்கை அரசு……..அங்கே வைக்கோல் துணிக்கப்பட்டது மாட்டுக்கன்றின் தோல்…இங்கே உபயோகப்படுத்திக்கொண்டது ரத்தமும் சதையுமாக நேற்றுவரை முள்ளிவாய்க்காலில் சுதந்திரக் கனலுடன் காத்துக்கொண்டிருந்த தமிழனின் தோல்…..!
கொஞ்ச நாட்களில் பால் கறப்பதற்கு முன் கன்றுக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதை மாடும் மறந்து விடும்….அடுத்த கன்றினை ஈன்று கொடுப்பதற்கு தயாராகி விடும்…..!
இன்னும் கொஞ்சநாட்களில் சர்வதேசமும் தமிழனின் உயிர் , இழப்பு , இனப்படுகொலை இவற்றையெல்லாம் மறந்து விடும்….தத்தமது வேலைகளைக் கவனிக்கச் சென்று விடும்…!
ஆனால் இறந்து போன தமிழர்களின் உயிர்களுக்கு என்ன தான் பதில்? ஒரு சில ராஜபக்சேக்களின் நிலப்பசிக்கு விருந்தான தமிழர்களின் உயிர்கள் இறந்து போன மாட்டுக்கன்றினை ஒத்ததுதானா?
வயதான பல மாடுகள் மாட்டிறைச்சிக்காக கேரளாவிற்கு அடிமாடுகளாய்ப் போவதுண்டு……இன்னுஞ்சில மாடுகள் தோல்களுக்காக பயன்படுவதும் உண்டு………உங்கள் கைப்பைகள் அத்தகைய மாட்டுத்தோல்களிலிருந்து வந்ததாகவும் கூட இருக்கக் கூடும்…இன்னும் சில மாட்டுத் தோல்கள் பறையடிக்கவும் போவதுண்டு…..
அத்தகைய மாட்டுத்தோல்கள் தமது வாழ்நாள் முழுதுமே அடிவாங்கிக்கொண்டே இருக்கும்……………ஒவ்வொரு அடியும் நாம் அடிமாடாகப் போயிருக்கக் கூடாதா என்று ஏங்குவதாகவே இருக்கும்…அதற்கும் உயிர் இருக்கிறது……..உணர்வு இருக்கிறது…..அதைச் சொல்லாத ஒரே காரணத்தால் மட்டுமே நாம் அதை புறந்தள்ளிவிட முடியாது…….
அத்தகைய பறையடிக்கும் மாட்டுத்தோல்களாக இன்று வன்னியில் சிறைப்பட்டிருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள்…..அந்த பறையடிக்கும் மாட்டுத்தோல்கள் பசி , பட்டினி இன்னும் அனேக அடிகளால் முள்ளிவாய்க்கால் பிணமாக நாமும் போயிருக்கக் கூடாதா என்று தான் இன்னமும் எண்ணக் கூடும்.!
பறையில் சிறை பட்ட மாட்டுத்தோல்கள் கிழிந்து போனால் தூக்கி தூர வீசிவிடுவார்கள்…ஆனால் சிறைபட்டிருக்கும் தமிழர்கள் தங்களது உணர்வு , உரிமை இவைகளெல்லாம் மறக்கப்பட்டு நடைப் பிணங்களாக தூக்கி வெளியே வீசப்படுவார்கள்…….
அந்த நடைப்பிணங்களால் உணர்வு பெற்ற ஒரு இனம் , உயர்ந்த நிலையில் இருந்த ஒரு இனம் , உரிமைக்குப் போராடிய ஒரு இனம் இன்னும் சில காலங்களுக்கு இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு அடிமைகளாக மாறிப் போவார்கள்.! கிழிந்த தோல்களாய தெருவில் வீசப்பட்டு அனாதைகளாக மாற்றப் படுவார்கள்….!
பயங்கரவாதத்தை வென்றதாகச் சொல்லும் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்?
வலிகள் நிரம்பிய வன்னி மண்ணுக்கு ஒத்தடம் கொடுத்திருக்க வேண்டும்……வாடா , நீயும் எம்மவன் என்று வாரியணைத்திருக்க வேண்டும்….!
ஆனால் வெந்த புண்ணில் வேல் அல்லவா பாய்ச்சுகிறது?
இறந்து போன தமிழ் மக்களுக்கான இறுதி அஞ்சலியைக் கூட அவர்கள் இறக்கவே இல்லை என்று மனிதநேயமின்றி மருத்துவர்களைக் கொண்டு புரளிகளை மேற்கொள்கிறது….
வவுனியாவின் புறப் பகுதிகளில் ஒட்டி வாழும் மக்களில் கொஞ்சப் பேரை வெளி ஊடகத்தார்களைக் கொண்டு பேசச் சொன்னால் உண்மை தெரிந்து விடப்போகிறது…அதை விடுத்து சர்வதேசத்தின் முன்னால் உண்மையை நிருபிக்கப் போகிறோம் என்ற போர்வையில் நடைப் பிணங்களாய் இருக்கும் மனிதர்களின் இறுதி நம்பிக்கையைக் கூட இல்லாது போகச் செய்கிறது.!
வன்னியின் இறுதிப் பகுதி வரை சுதந்திர கீதம் பாடிய புலிகளின் குரலை முடக்குவதற்கு பெருமளவு உதவி செய்த இந்தியா இன்று வெறும் இறுதிச்சடங்குகளுக்கான செலவைப் பார்த்துக்கொள்வதுடன் கடமை முடிந்ததாய் கணக்கு வைத்துக்கொண்டது.
அதைத் தாங்கிப் பிடிக்கும் தமிழினத்தலைவரோ , மெதுவாகப் பேசுங்கள் இல்லையேல் சிங்களன் நமது சிண்டைப் பிடித்துவிடுவான் என்று சபையில் பேசுகிறார்…இவர் ஒரு தரம் சொன்ன போர்க்களத்திற்கு தனது சிறு வயது மகனை அனுப்பிய கதை அவமானச் சின்னமாகக் காட்சி அளிக்கிறது……….!!
பேசிப் பேசியே இனவுணர்வினை ஈழத் தமிழர்களுக்கு கிளர்ந்தெழச் செய்திட இவரும் ஒரு காரணம் என்பதையெண்ணி ஈழத்தமிழன் வேதனையில் உழல்கிறான்…!
எது எப்படியோ…எவருக்கும் இங்கே மனசு என்பதோ , மனச்சாட்சி இல்லை என்பதையும் , அவரவர் பிழைப்பே பிரதானம் என்பதையும் இன்று இந்த இறுதிப் போர் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது….
இனி , ஈழத்தமிழர்கள் இருந்தார்கள் இலங்கையில் என்றே வரலாறு பேசட்டும்…அசோகர் மரம் நட்டார் என்ற வரலாற்றையே படித்துக் களைத்துப் போன தமிழகத்து மக்கள் இந்தப் புதிய வரலாற்றைப் படிக்கட்டும்...,
அத்துடன் சேர்த்து புறநானூற்று இலக்கியத்துடனும் புல்லரித்துப் போகட்டும்…!!!!
அங்கே ஈழத்தில் புதைக்கப்பட்ட தமிழர்களின் உடல் செல்லரித்துப் போகட்டும்!!!!!
வேறென்ன சொல்ல?
'‘.
3 பின்னூட்டங்கள்:
அன்பு நண்பர் பதி..
இந்தமுறை நான் இணைத்தவுடனேயே பதிவு தமிழ்மணத்தில் இணைந்து விட்டது.
சண்டைக்கு சாட்டர்டே ஹாலிடே?
அங்கே ஈழத்தில் புதைக்கப்பட்ட தமிழர்களின் உடல் செல்லரித்துப் போகட்டும்!!!!!
வேறென்ன சொல்ல?????
ஈழத்தின் கண்ணீருக்கு
விடிவே இல்லை.
ஈழத்தின் கண்ணீருக்கு
விடிவே இல்லை./
இருக்கிறது நண்பர் உதயதேவன்...அது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேரும் போது.!
நன்றி வருகைக்கும் , கருத்துக்கும்!
Post a Comment