மாவீரர் திருநாள்…தமிழரின் ஈகைத் திருநாள்.!
Tuesday, November 24, 2009
வெம்மை தாங்காமல் உதிர்ந்த இலைகளை வேய்ந்த நிலம்…
ஓணானும் நீயும் ஒன்றாய்க் கிடந்த அவ்வேலிச்செடி மறைவு..
எதிரியின் ரவையொன்று பட்டு கிழிந்த உன் வேட்டி…
வெண்மை போர்த்திய கடற்கரையில் சிதறிய தோட்டாக்கள்…
வேர்வை வாசத்தால் மட்டுமே புகழுற்ற உன் உடை…
கண் துஞ்சாமல் எதிரியை எதிர்கொண்ட உன் தொலைநோக்கி….
விண்ணதிர நீ வேட்டெழுப்ப உதவிய பீரங்கிகள்….
சாகக்கிடைக்கையிலும் கூட எதிரியை வீழ்த்திய உன் கத்தி…
சூரிய வெக்கையில் நீ ஓய்வெடுக்க உதவிய மேகத்தின் நிழல்கள்…

பயணத்தின் தொலைவில் தீர்ந்து போன தண்ணீர்க்குவளை….
பாசத்துடன் அப்போதும் அள்ளிப்பருக நீர் தந்த நீரோடை….
வேப்பமர நிழலில் நீ படுத்துறங்கிப் போன தென்னந்தடுக்கு..
காலமும் , திசையும் காட்டிய உன் கையகல கடியாரம்…..
கண்ணின் மணியை எப்போதும் மறைத்திருந்த கறுப்புக்கண்ணாடி…
கணப்பொழுதினில் பல எதிரிச்சிப்பாய்களை வீழ்த்திய உன் துப்பாக்கி….
ரணப்பொழுதினில் கூட ரகசியம் காத்திட்ட உன் வீரம்…
எதிரிகள் சூழ நின்ற போதும் இறுதிவரை களமாடிய உன் தீரம்….
மரணத்தைக் கூட நண்பனாய் மதித்து நீ போர் செய்த களம்….
எதிரிக்குக் கேட்டிடாது நீ தும்மிய தும்மலின் எச்சங்கள்…
வெயிலுக்கும் , மழைக்கும் , உனக்கும் இடைவெளி தந்த தொப்பி…
சவரம் செய்திட்டாலும் காலம் வீணாகும் என்று நீ வளர்த்த தாடி…
வைரம் பாயந்த உன் கைகளும் , தினவெடுத்த உன் தோள்களும்,
தைரியம் மேலிட்ட உன் பார்வையும் சொல்லிடும் அப்புகைப்படம்..
தீயினில் எரிந்து போனதன் மிச்சமாய் உன் அன்னையின் சீலை..
தங்கை நினைவாய் நீ எடுத்துச்சென்ற ஒரு ரிப்பனின் இன்னொரு ஜோடி…
இப்படி , உன் நினைவுகளைச் சொல்லும் ஒவ்வொரு பொருளும் உன்
இல்லாமையின் இருப்பைச் சொல்லிச்சொல்லி சபிக்கின்றன எங்களை!

பொல்லாத பகைவரின் குண்டினை நீ எதிர் கொண்டு நின்றாய்…
உயிர் பிரிந்திடும் வேளையிலும் மண்ணுக்கு மரியாதை செலுத்தினாய்.
உதிர்ந்து வீணாய்ப் போயிடும் மயிரென வாழாமல் இருந்திட்டாய்.
மண் , மக்கள் , மனிதம் என வாழும் தலைவனை மதித்திட்டாய்…
மாறாப் புகழுடன் வீரனே , நீ வானுலகம் சென்றிட்டாய்…
எம்மவர் பூமியோ , எம் தமிழர் நாளும் தவழ்ந்திட்ட பூமியோ
அயலவர் கால்களின் மிதியடியில் நாளும் மிதிபடும் காலமிது.
நடந்து, திரிந்து, அலைந்து , ஓடிய பூமியை அபகரித்த அநீயிது…
காலம் காலமாய் , எம்சொந்தம் வாழ்ந்த மண்ணில்
வாழ்க்கைக்கு சாட்சியென சிதிலமடைந்த கட்டிடங்களும்,
வாழவைத்த மூச்சுக்காற்றும், வெறுமையைச் சொல்லிட்டாலும்
வீழ்ந்த பொழுதினில் கூட வீழா உம் வீரமும் போற்றிட
வாய்த்ததொரு நன்னாள்…..இந்த மாவீரர் பொன்னாள்….
எம் நெஞ்சினில் வாழும் உம் புகைப்படத்திற்கு பொட்டிட்டு..
விம்மலுடன் நினைக்கிறோம் உம்மை இம்மாவீரர் நாளில்….!!!
வானகத்தில் நீங்கள் இருப்பினும் , வீரமின்னும் தீரவில்லை..
வையகத்தின் அடிமைகள் நாம் என்ற பெயர் போகவில்லை..
மாவீரன் சங்கர் வீழ்ந்தது அந்த நவம்பர் இருபத் தேழு….
மாவீரம் கொண்ட எம் போராளிப் படையே மீள எழு…
மாசறு பொன்னாய் நீ துயில் கொள்ளும் இடம் மீ்ட்டு..
உம் வரவின்றி வாடிய செடிகொடிகளுக்கு உரம் இட்டு.
நீர் விட்ட தடம் அடியொற்றி , பட்ட கடன் இனி தீர்த்து…
நீர் ஈழத்தில் துயில் கொள்ளும் இடங்களை மீட்டெடுத்து
வீணரை வென்று வன்னியில் உம் காலடி பணியும்
காலம் வரக் கடவதாய் சபதமேற்றுப் போற்றுவோம்…
சாவினிலும் மணக்கும் எம் சந்தனப் பேழைகளை….!!
வீரவணக்கம்.....!!!!!
'‘.
4 பின்னூட்டங்கள்:
வீரவணக்கம்
வீர வணக்கம்! வீர வணக்கம்!
தமிழர்களே வேற்றுமைகளை மறந்து, துரோகங்களை விடுத்து ஒன்று கூடுங்கள்! இன்று நம்மினத்துக்கு தேவையானது ஆத்ம பலம்!
ஒன்றாய் விழுந்தால் நூறாய் எழுவோம்!
தமிழீழத்தாயகம் உலகத் தமிழரின் தாகம் என்று முழங்குவோம்
வீர வணக்கங்கள்
Post a Comment