அது செவ்வாய் கிரகத்தின் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தமிழ்ப் பேருலகம்.
அரசியல் ஆசை கொண்டு முதல்வர் நாற்காலியைப் பிடிக்கலாம் என்ற கனவில் வந்த நடிகர்கள் அந்தக் காலம் தொட்டு உண்டு. கும்.கி.யயரில் ஆரம்பித்து பயலலிதா , சுரத்குமார் , மஜயகாந்த் , என்று ஓரளவு அரசியல் ஆசையில் செயித்த நடிகர்களும் உண்டு. பெயரே தெரியாமல் ஓடிப்போன நடிகர்களும் உண்டு. இவர்களுடன் சேர்த்து இன்னும் பல காமெடி பீஸ்களும் உண்டு.
அப்படியான காமெடி பீஸ்களில் ஒருவர்தான் தீக்குச்சியார்….அவர் தமிழ் சினிமாவுக்கு வந்த கதை ரொம்பக் கேட்டுக் கேட்டுப் புளித்த போனதானபடியால் அதை விட்டுவிடுவோம்.! ஆனால் அவர் கட்சி ஆரம்பித்த கதைக்கு அவரது நற்பணி மன்றங்கள் முக்கியமானபடியால் அதிலிருந்து இந்த வரலாற்றுப் பதிவு ஆரம்பிக்கிறது.
வகைதொகையில்லாமல் வந்தவர்களை எல்லாம் வாழ வைக்கும் தமிழ் மக்கள் நடிகர் தீக்குச்சியாரை மட்டும் சும்மா விட்டுவிடுவார்களா என்ன? அவர் வந்து போன ஒன்றிரண்டு படங்கள் சில்வர் ஜூப்ளியாதலால் நடிகர் தீக்குச்சியாருக்கு ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளம் உருவாகி இருந்தது. அந்த ரசிகர் பட்டாளத்தில் ஒருவருக்கு கூட செய்வதற்கு வேலை எதுவும் இல்லை என்பதால் அனுதினமும் தீக்குச்சியாரின் புகழ் பாடுவதே தொழிலாகிப் போனது. அவர் படம் ரிலிஸாகும் தினம் ஒரே தீபாவளிதான்.
அப்பாவிடமும் , அம்மாவிடமும் சண்டை போட்டு பணத்தை வாங்கி வந்து தியேட்டரில் பால் அபிஷேகம் பண்ணுவது . கட் அவுட் கட்டுவது , பேனர் கட்டுவது என்று அன்று முழுக்க கொண்டாட்டமாகத் தான் இருக்கும்…!
இதுக்கு ரெண்டு காரணம் உண்டு……ஒன்று ஓமக்குச்சியாரின் நடிப்பைப் பாராட்டி அவர் பின்னால் அணி திரள்வதில் உள்ள சந்தோஷம். ரெண்டு……பொழுது போகணும்ல?????
இப்படியாக "பொழுது போகணும்ல" என்ற ஐடியா அன்று குமரனுக்கு வந்திருந்தது. குமரன் வீட்டில் மூணாவது பையன்…பிளஸ் டூ படிக்கும் போது 40 வயது கமலா டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்த காரணத்தால் பள்ளியில் இருந்து துரத்தப்பட்டவன்….துண்டு பீடி பொறுக்கிக் குடித்ததால் அப்பா அடிக்கப் போக அப்பாவையே அடித்து விட்டு வீட்டிற்கு அப்பப்ப சாப்பிட மட்டும் போய் வருபவன். ! பெத்த கடனுக்கு சோத்தை மட்டுமே போட்டுவிட்டு புண்ணியம் தேடிக்கொண்டிருந்தார்கள் பெற்றவர்கள்.
அப்பப்போ , குமரனுக்கு நண்பர்களின் துணையில் தீர்த்தாபிஷேகமும் உண்டு….நண்பர்களில் அனேகம் பேரும் இந்த "பொழுது போகணும்ல" கோஷ்டிதான்……அன்று முழுவதும் பங்க் கடை தன்ராஜுக்கு சனி தெசைதான். பெஞ்ச்சில உட்கார்ந்து கொண்டு பண்ணும் அழிச்சாட்டியத்தில் எவனும் கடை பக்கம் கூட வரமாட்டான். இப்படியானதொரு வரலாற்றுச் சூழலில் தான் நடிகர் தீக்குச்சியார் "காத்தடிச்சாப் பறந்துடுவேன்" என்ற திரைப்படத்தில் அரை சீனில் அறிமுகமாகி இருந்தார்.
குமரனுக்கும் ஒரு அடையாளம் தேவைப்பட்டதா தாம் செய்யும் நற்பணிகளுக்கு? பிடித்தான் தீக்குச்சியாரை….!!!!!
அதனால் "பொழுது போகணும்ல" என்ற ஐடியாவில் ஒத்த கருத்து கொண்ட (???) நண்பர்களை கூட்டிக்கொண்டு போய் தீக்குச்சியாரைப் பார்த்தான்.
"அய்யா , உங்க பேர்ல ஒரு நற்பணி மன்றம் ஆரம்பிக்கணும்…!"
தீராத சமூக ஆர்வத்தில் தவித்துக்கொண்டிருந்த தீக்குச்சியாரும் "ஆரம்பிங்கடா ரசிகர் மன்றத்த" ன்னு டிரம்ஸ் கொட்ட ஆரம்பிச்சார்…( முன்னேறணும்ல? அதான் முரசுல இருந்து டிரம்ஸ்…).
இப்படியாகத் தொடங்கியது நடிகர் தீக்குச்சியாரின் சமூகப் பணி…!
இப்படி ஒவ்வொரு ஊர்லயும் இருந்த "பொழுது போகணும்"ல கோஷ்டி தீக்குச்சியாரின் சமூக ஆர்வத்திற்கு தீணி போட்டுக்கொண்டிருந்தது….அ.வ்வப்போது சென்னை போரடிக்கும் போது வெளியூர் போகும் தீக்குச்சியார் இந்த "பொழுது போகணும்"ல கோஷ்டிக்காரங்க ஏற்பாடு செஞ்ச நிகழ்ச்சில அங்கங்கே ஒண்ணு ரெண்டு தையல் மிசினையும் கொடுத்து வெளம்பரம் தேடிக்கிட்டது மட்டுமில்லாம தனது தாளாத சமூக ஆர்வத்தையும் தணிச்சிகிட்டார்..!
குமரனுக்கும் மனத்திருப்தி…
"ஊர்ல ஒருத்தங் கூட நம்மளை சும்மா சுத்திகிட்டு இருக்கேன்னு சொல்லிட முடியாதே…………..நற்பணி மன்றம் நடத்துறோமே? ""
இப்படித்தான் போய்கிட்டு இருந்தது குமரன் அன் கோ மற்றும் தீக்குச்சியாரோட வாழ்க்கை. அப்பப்போ வெளியூரு போற போது வர்ற கூட்டத்த பாத்து தீக்குச்சியாருக்கு அரசியல் ஆசை வேற வந்துடிச்சி…யோசிச்சார்………..மார்க்கெட் வேற டல் ஆயிடுச்சி……ஒன்று ரெண்டு சீன்ல கூப்பிட்டவங்க இப்ப வூட்டுப் பக்கம் எட்டியே பாக்கறதில்லே….
எத்தன நாளாத்தான் நம்மளே காசு போட்டு படம் எடுத்து நடிக்கிறதுன்னு யோசிச்சார்…..யோசிச்ச படியே தீக்குச்சியார் ஆகஸ்டு மாதத்தின் பின்னிரவில் தூங்கிப் போனார்…
"யாருக்காக இந்த நாடு ? நம்ம தமிழ் நாடு? " இப்படி ஒரு முன்னாள் முதல்வர் பாட
"நமக்காக , நடிகர்களுக்காக இந்த நாடு நம்ம தமிழ்நாடு!" இப்படி எதிர்ப்பாட்டு இன்னொரு முன்னாள் முதல்வர் பாடுறாங்க.
பாட்டு முடிஞ்சதும் தலைமைச்செயலகம் , அங்க பார்த்தா கும்.கி.யார் முதலமைச்சர் , பயலலிதா துணை முதலமைச்சர் , மஜயகாந்த் மின்சார அமைச்சர் , நடிகர் குஜய் வேளாண்மை அமைச்சர் , நடிகர் பார்த்திக் பொதுப்பணித்துறை அமைச்சர் , நடிகர் சுரத்குமார் தான் நாட்டாமை – ச்சே , அவுருதான் சட்டப் பேரவை சபாநாயகர் , எஸ்.எஸ் இந்திரன் தான் கொறடா , சப்போலியன் – சட்ட அமைச்சர் , ஜே கே கத்தீஷ்– கலைத்துறை அமைச்சர் இப்படி நீளுது பட்டியல்…
அதில் தீக்குச்சியார் மட்டும் இல்ல……எம்மாம் பெரிய வரலாற்றுத் தவறு அது? ……முழிச்சுப் பார்த்தார்……அட்ச்சே கனவா……காலைல எழுந்ததும் சட்டுப் புட்டுன்னு ஒரு கட்சிய ஆரம்பிச்சிடுறோம்ங்கிற வரலாற்று முடிவை அன்னிக்கு எடுத்தார் தீக்குச்சியார்…
எந்திரிச்சதும் பிரஸ் மீட் ஏற்பாடு பண்ணச் சொல்லி மேனேஜர் கிட்ட சொல்லி வுட்டுட்டார்…….!
சாயந்திரம் …………
பிரஸ் மீட்ல ஒரே கூட்டம்…
தம்பதி சகேதமா உக்காந்துகிட்டு இருக்கார் தீக்குச்சியார்.
"எதுக்காக அய்யா இந்த பிரஸ் மீட்டு ? " ஒரு நிருபர் கேக்கிறார்……நக்கலாக…
"வயசு என்னமோ அருபது ஆச்சி , ஆனா போன வாரம் கூட சினிமால யூத்து கட்டினவன் நான்…என்னப்பாத்தா அய்யான்னு சொல்றே நீ? இருஇரு நான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறேன்…! அதுக்கப்புறம் ஆட்சிக்கு வந்து உன் வூட்டுக்கு ஆட்டோ அனுப்பறேன்" இது தீக்குச்சியார்…
பின்னாடி சடசடன்னு சத்தம்……….
"என்னய்யா அது சத்தம்? " ஆவேசமாகக் கேட்கிறார் தீக்குச்சியார்..
"அது ஒண்ணுமில்ல சார். நீங்க அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறதா சொன்னதக் கேட்டு அதிர்ச்சியில ஒரு பத்திரிக்கைகாரர் மயங்கி வுழுந்துட்டார்….!" கூட்டத்திலிருந்து ஒரு குரல்…!
"பாத்தீங்களா தமிழ் மக்களே………நான் நாட்டுக்குச் சேவை செய்ய வர்றதுங்கிறதை எவ்வளவு ஆர்வமா பத்திரிக்கைக்காரங்க கூட எதிர்பார்க்கிறாங்கன்னு…?" இது தீக்குச்சியார்…
"சரி , உங்க கட்சி பேரு என்ன? " சோக கபடன் பத்திரிக்கையாளர்..
"இப்படி விசுக்குன்னு கேட்டா எப்படி? "
யோசிக்கிறார்…
"சரி… இப்போதைக்கு "நாடாளும் தேசிய திராவிட ஆரிய தீக்குச்சியார் சமத்துவ பாட்டாளி கட்சி" னு வெச்சிக்கிடுங்க…"
"நா.தே.தி.ஆ.தீ.ச.பா..க ?? ரொம்பப் பெரிசா இருக்கே கட்சிப் பேரு? மக்கள் வாயில நுழையுமா? மனசில பதியுமா ? " சாக்கீரன் புலனாய்வுப் பத்திரிக்கை நிருபர்..
"கட்சிப் பேரு வாயில நுழையணும்கிறதுக்காக "வாழைப் பழ முன்னேற்றக் கழகம்னு " வெச்சிக்கிட முடியுமா? "
இந்தப்பதிலைக் கேட்டு வீட்டுக்கு முன்னாடி நின்ன குமரன் அன் கோ கூட்டத்தின் கைதட்டலும் , விசிலும் விண்ணைப் பிளக்கிறது………அது அடங்கும் வரை காத்திருந்த தீக்குச்சியார் தொடர்கிறார்.
"எங்களுக்குன்னு ஒரு கொள்கை , கோட்பாடு இருக்கு…அதையெல்லாம் மனசுல வெச்சு ஞாபகத்துல இருக்குற தலைவர்கள் பேரு , கட்சிப் பேரு எல்லாத்தையும் கலக்கி குலுக்கிப் போட்டுத்தான் இந்த வரலாற்றுப் பேரை வெச்சிருக்கிறோம்….. அதனால இதான் கட்சிப் பேரு………இனி போகப் போறேன் ஊரு ஊரா………….வெற்றிக்கொடி நாட்டப் போறேன் மக்கள் மனசுல..."
"சரி அப்படி என்ன தான் சார் உங்க கொள்கை?" ஷகிழன் எக்ஸ்பிரஸ் நிருபர்.
இதென்னடா அடுத்த வில்லங்கம்?னு முழிக்கிறார் தீக்குச்சியார்…பக்கத்துல இருக்குற அன்னை சாமலதா சமாளிக்கிறார்.
" அதெல்லாம் வீட்ல இருக்குற பொதுக்குழு , செயற்குழு , மாமனாரு , மாமியாரு அப்புறம் "ஃம்ம்ம்" தம்பி இவுங்கள கலந்து ஆலோசிச்சி அப்புறமா சொல்லுவோம்!"
"எப்ப சொல்வீங்க? " அதே ஷகிழன் எக்ஸ்பிரஸ் நிருபர்.
"டேய்…நீ யாரு ? மாமுக காரனா? உன்ன யாரு உள்ள விட்டது? முதல்ல வெளியே போ…!" அலறுகிறார் தீக்குச்சியார்.
பயந்து போன ஷகிழன் எக்ஸ்பிரஸ் காரர் அப்போதே அப்பீட்டு ஆகிறார்..
ஒருவழியாக கொள்கை பற்றிய கேள்வியை சமாளித்த தீக்குச்சியார் அடுத்த கேள்வியை எதிர்நோக்குகிறார்..
"சரி…கட்சி ஆரம்பிக்கறதுக்கான காரணம் என்ன? " சீனியர் கபடன் நிருபர்….
"என்னய்யா கட்சி ஆரம்பிக்கிறது அண்ணா காரணம் சொன்னாரா? கும்கியார் சொன்னாரா? சுரத்குமார் சொன்னாரா? மஜயகாந்த் சொன்னாரா? இல்லை நம்ம பார்த்திக்தான் சொன்னாரா? என்னை மட்டும் ஏன்யா கேக்குறீங்க காரணம்? எல்லாம் ஆளுங்கட்சிக்காரங்க சதி…என் வீட்டுக்கு முன்னாடி இருக்குற மைல்கல்லை இடிச்சுத்தள்ளி இருக்காங்க ஆளுங்கட்சிக் காரங்க……இப்ப சொல்லிக்கிறேன் அதனால எல்லாம் நான் பயப்பட மாட்டேன்……….அரசியல் கட்சி ஆரம்பிப்பேன்"
"உங்க கட்சியோட எதிர்காலம்…?" அதே சீனியர் கபடன் பத்திரிக்கையாளர்…
"எங்க கட்சியோட எதிர்காலம் பிரமாதமா இருக்கு……….நெறைய பேரு வேலையில்லாம தமிழ்நாட்டுல சுத்திகிட்டு இருக்காங்க…நெறைய பேரு ஏதாச்சும் ஒரு கட்சில சேந்து கல்லா கட்டணும்கிற முடிவுல இருக்காங்க….அதனால என் கட்சிக்கு தாராளமா ஆதரவு இருக்கு…!"
"சரி இதுவரைக்கும் நீங்க என்ன மக்கள் சேவை செஞ்சிருக்கீங்க?" இது குமுரொளி நிருபர்.
"மக்கள் சேவை நிறைய செஞ்சிருக்கேன்………நற்பணி மன்றம் நடத்திட்டு வர்றேன்..அது மூலமா பேனர் அடிச்ச வகையில இதுவரைக்கும் 27 பிரஸ்காரங்க பலன் அடைஞ்ச்சிருக்காங்க……….கட் அவுட் கட்டுன வகையில 37 பேர் பலன் அடைஞ்சிருக்காங்க…தோரணம் கட்டுறதுக்கு ஏணி பண்ணின வகையில் மூணு பேர் பலன் அடைஞ்சிருக்காங்க………சினிமா போஸ்டர் ஒட்டின வகையில இதுவரைக்கும் தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கானோர் பயன் அடைஞ்சிருக்காங்க…..இன்னும் இப்படி என் சேவைகளை சொல்லிக்கிட்டே போகலாம். எல்லாம் இந்த தமில் மக்கலுக்கு தெரியும்…!
அட அவ்வளவு ஏன்……"நீ ஒரு முட்டாள் " சினிமாவுல வயசான பாட்டிக்கு எந்திரிச்சி சீட் கொடுத்திருக்கேன்…! அது என்ன படம் ? ம்ம் ஞாபகம் வந்திருச்சி…ஓலைகள் பிய்வதில்லை படத்துல ஹீரோயினுக்கு மாங்கா பிடுங்கித் தந்திருக்கேன்….இது போதாதா என் சேவை மனப்பான்மையை மக்கல் அறிந்து கொள்ள??
சரி , மற்ற கட்சிகளில் இருந்து உங்க கட்சியை எப்படி வேறுபடுத்தறீங்க?அப்புறம் உங்க இலக்கு என்ன? – இது கனமணி நிருபர்
"டேய்…யார்றா நீ வருமான வரித்துறை ஆளா? எத்தினி தடவ ரெய்டு பண்ணினாலும் நான் அசர மாட்டேன் …இதுக்கெல்லாம் பயந்துட மாட்டேன்"
சாமலதா தொடையை அமுக்குகிறார்…"என்னங்க…அது போன வாரம் "நீதிக்காக" படத்துல வர்ற வசனம்….இதுக்குத்தான் பிரஸ் மீட்டுக்காவது கொஞ்சம் தெளிவா வாங்கன்னு சொன்னேன் ….கேட்டாத்தானே?"
ஒருவழியாக நிலைமையைப் புரிந்து கொண்ட தீக்குச்சியார்…….
"எங்க கட்சி இளைஞர்கள் நிறைந்த கட்சி…எங்க நற்பணி மன்றத்துல நிறைய வேலை வெட்டியில்லாத இளைஞர்கள் இருக்காங்க…அவுங்களையெல்லாம் வச்சு வித்தியாசமா கட்சியை வழிநடத்தப் போறேன்………இதுவரைக்கும் யாருமே நடத்தாத புதுவிதமா இருக்கும்…ஓப்பனிங்கே பிரமாண்டமா கைதட்டல் விண்ணைப் பிளக்கும் பாருங்க….அங்க வைக்கிறோம் நாங்க பஞ்ச்சை..ஆக முற்றிலும் வித்தியாசமான கட்சி எங்க கட்சி..! 2011 ல் நான் தான் ஆட்சி அமைக்கப் போறேன்……..வெற்றி நிச்சயம்…அதுதான் என் இலக்கு….!
இலேசாக புது இயக்குநர்கள் புரட்யூசரிடம் கதை சொல்லும் பாணி வர கிறுகிறத்துப் போன நிருபர்கள் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறார்கள்……….பேட்டியும் முடிவடைகிறது.
தீக்குச்சியார் கட்சி ஆரம்பித்த செய்தி தீ போல் பரவுகிறது….குமரன் மற்றும் "பொழுது போகணும்"ல கோஷ்டி பிழைப்புக்கு வழி கிடைத்த சந்தோஷத்தில் பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறார்கள்……….இப்படியாக நடிகர் தீக்குச்சியார் கட்சி ஆரம்பித்த கதை நீள்கிறது…!
நேத்து வந்த தீக்குச்சியார் கூட கட்சி ஆரம்பித்து விட்டதைக் கண்டு பொங்கி எழுந்த மஜினி ரசிகர்கள் மஜினி கட்சி ஆரம்பிக்கும்வரை கஜினி முகம்மதுவாய் அவரது வீட்டுக்குப் படையெடுக்கப் போவதாய் சற்றுமுன் கிடைத்த தகவல் சொல்கிறது….!
மிக முக்கிய டிஸ்கி :
இந்த தீக்குச்சியாரின் கட்சி ஆரம்பித்த கதை எல்லாம் நடந்தது செவ்வாய் கிரகத்தில். அதனால் இந்தக் கதையில் வரும் எல்லோரும் செவ்வாய் கிரகத்தில் வசிப்பவர்களே……..அதனால் இந்தப் பூவுலகில் வாழும் எவரும் இக்கதையில் சுட்டப்படவில்லை….மற்றும் யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்பதும் எமது நோக்கமில்லை. இந்த டிஸ்கியையும் மீறி யார் மனதையாவது இந்த வரலாற்றுப் பதிவு புண்படுத்தி இருக்குமானால் அதற்கான தாழ்மையான வருத்தங்கள்……….
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.