முகில், மதி மற்றும் பாலா.....!
Tuesday, December 29, 2009
பதிவுலகுக்கும் எனக்குமான இடைவெளி நாட்களாக , வாரங்களாக நீண்ட இடைவெளி தற்போது மாதங்களில் வந்து நிற்கிறது. அது வருடங்களாகுமுன் வந்து ஒரு “உள்ளேன் ஐயா…” போட்டு விடலாம் என்று கம்பெனி உத்தரவிட்டதால் வந்திருக்கிறேன்.
என்னை மிஸ் பண்ணியவர்களுக்கும் , நான் மிஸ் பண்ணியவர்களுக்குமான வருத்தங்கள்….மன்னிக்க வேண்டுகிறேன்….
யெப்பே….இவம் பதிவு எழுதலேன்னா என்ன குடியா முழுகிடுச்சி என்று எகிரும் அட்டாக் பாண்டிகளுக்கும் என் ஆழ்ந்த வருத்தங்கள்…….இதோ இந்த ஒரு பதிவுதான்…மீண்டும் கொஞ்ச இடைவேளை விட்டு தை மாசத்திலிருந்து கட்டம் கட்டி ஆடப் போகிறேன்……
தமிழ்மணம் விருதுகள் என்று அறிவித்த போது சுட்டியெடுத்து துணைவியாரிடம் காட்டி , நண்பர்களுடன் பேசி எடுத்து வைத்த பதிவுகள் என்னைப் பார்த்து சிரிக்கின்றன. விவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வாரே…..”நாய்க்கு பேரு வச்சியே……சோறு வச்சியா?”ன்னு….அது போலத்தான்……பதிவுகளைத் தேர்ந்தெடுத்து வைத்தால் போதுமா …அதை விருதுகளுக்கான பதிவுகளின் பக்கத்தில் சேர்க்க வேண்டாமா என்று…
சரி….ஆனது ஆகிவிட்டது………..இனியும் தாமதத்திற்கான சுயபுராணப் புலம்பலை பேசி என்ன ஆகிறது…( எனக்கு ஒரு பதிவாச்சி…..!!!ஹிஹிஹிஹி..)
புத்தாண்டு வருகிறது….
புத்தாண்டு சிலருக்கு புதிய அனுபவங்களைத் தரக் காத்திருக்கிறது…
புத்தாண்டு சிலருக்கு புதிய வாய்ப்புக்களைத் தரக் காத்திருக்கிறது…
எனக்கோ…….இந்தப் புத்தாண்டு எனக்கு மிகப்புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறது.
ஆம்….
“அப்பா” என்கிற பேரின்ப அனுபவத்தினைத் தந்திருக்கிறது.
மனைவி என்கிற ஸ்தானத்திலிருந்து அம்மா என்கிற இடத்திற்குச் செல்ல அவள் பட்ட கஷ்டங்கள் தான் எத்தனை எத்தனை….??
தூரத்திலிருந்து தொலைபேசியில் பகிர்ந்த போதே வலித்தது…..
அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க அவள் அனுபவிக்கிற பிரசவ வேதனையை நம்மால் நினைத்துப்பார்க்க இயலுமா என்ன?
ஆண்களுக்கு உடல்வலிமை இருக்கலாம்…ஆனால் பெண்மையின் மனவலிமைக்கு அது எவ்விதத்திலும் ஈடாகாது என்பதற்கான ஒரு உதாரணம் தான் பிரசவம்….!!!!
இந்தச் சமூகம் உபயோகமற்ற , குருட்டு , முட்டாள் , தன்னலமிக்க மனிதர்களால் நிரம்பியிருக்கிறது.
அதனால் தான் பெண்பிள்ளைகளைப் பெற்றாலே வெறுப்பினை உமிழ்வதும் , குழந்தைப் பேறு இல்லாதவர்களை “மலடி” என்று கேவலமாகப் பேசுவதிலும் அளவற்ற ஆர்வம் செலுத்துகிறது.
திருமணம் என்கிற ஆழமான , அற்புதமான பந்தத்தினை வெறும் குழந்தைச் செல்வத்திற்கான வழியெனவும் , பெண்களை குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரமாகவும் பார்க்கும் இந்த பாரதச் சமுதாயம்தான் உலகளவில் தமது கலாச்சாரம் மிகச்சிறந்ததென பெருமை கொள்கிறது…..அதற்கான எந்த அடிப்படையும் இன்றி…
சிறந்த மனிதர்களால் மட்டுமே சிறந்த நாகரீகம் அமையவியலும்….சிறுமை மனிதர்களால் நிரம்பிய நமது கலாச்சாரம் எப்படி சீரான கலாச்சாரமாக இருக்க முடியும் என்ற என் கேள்வியில் உள்ள நியாயம் உங்களுக்குப் புரிகிறதா?
சரி…அது கிடக்கட்டும்…….
மிகுந்த தேடல்களுக்கிடையிலே எனது மகனுக்கு ஒரு பெயரையும் சூட்டி ஆகிற்று……அழகு தமிழ்ப் பெயர் ஒன்றையே சூட்டுவேன் என்ற எங்கள் முடிவுக்கு எழுந்த எதிர்ப்பு கண்டு மலைத்துத்தான் போனேன்.
உலகத்தில் தமது மொழியில் பெயர் வைப்பதை விரும்பாத மொழிப்பாசம் மிக்கவர்கள் தமிழர்களாகத்தான் இருக்கமுடியும் என்பதில் எந்தச்சந்தேகமும் எனக்கு இப்போது இல்லை….:(
“ஷ்….ஹ………ஸ…." இல்லாமல் பெயர் வைத்தால் மாடர்னாக இல்லையாம்…என்ன கொடுமை சார் இது…?
பாலாவாக இருந்த நான் 2008 ல் மதிபாலாவாகினேன்.
2010ல் மதிபாலாவாக இருந்த நான் இனி “மதி , முகில் மற்றும் பாலா” வாகிறேன்..
ஆம் ,எதிர்ப்புக்களைக் கடந்து “முகில்” என்ற பெயரைச் சூட்டியிருக்கிறோம்.!
இனிய ஆங்கில மற்றும் தைப் பொங்கல் தின வாழ்த்துக்கள்…
'‘.